இந்து மதம் பன்மைத்துவம் கொண்டதா?
அருணன்
தமிழ் வரலாறு குறித்து இலக்கியச் சான்றுகள் உள்ளன; பொருள் சான்று இல்லாமலிருந்தது. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் 100 ஏக்கரில் அரை ஏக்கர் நிலம் மட்டுமே அகழாய்வு செய்ததில் 5ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கிடைத்துள்ளன. அவை 2,200 வருடந்திற்கு முந்தையவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சங்க இலக்கியமும் 2 ஆயிரம் வருடத்திற்கு முந்தையது.
கீழடியில் செங்கல் சுவர் வீடு, சுடுமண் குழாயுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் என நகர நாகரீகத்தோடு தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். அங்கு கிடைத்த மண்பாடங்களில் ஆதன், உதிரன், திசன் உள்ளிட்ட பெயர்கள் கிடைத்துள்ளன. அந்தச்சொற்கள் இன்றைய தமிழ்மொழியிலும் உள்ளது. இத்தகைய பெருமைமிக்க கீழடி அகழாய்வு செய்ய அரசு மறுப்பது ஏன்? அகழாய்வுக்கு பொறுப்பான அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது ஏன்? நிர்வாக தீர்ப்பாயம் இரண்டுமுறை உத்தரவிட்டும் அதனை அமல்படுத்தாதது ஏன்?
ஏனெனில் பாஜக-வின் வழிகாட்டி யான ராஷ்டிரிய சுயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) வேத நாகரீகத்தை தவிர வேறு நாகரீகம் இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. பல இனங்கள், மொழிகளைக் கொண்ட இந்தியாவில் மொழிவழி மாநிலம் அமைக்க கம்யூனிஸ்ட்டுகள் போராடியபோது, அவ்வாறு அமைக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது ஆர்எஸ்எஸ். அந்தத் தீர்மானத்தில் “..நமது அரசமைப்பு சட்டத்தில் உள்ள சமஷ்டி (கூட்டாட்சி) பேச்சுக்களை குழிதோண்டி புதைக்க வேண்டும்...தனித்தனியான, பிராந்தியவழியிலான, தனித்த போக்குடைய, இனவாரி பெருமிதத்திற்கு இடம்கிடையாது.” என்று கூறப்பட்டிருந்தது.
ஒருநாடு, ஒரு அரசு, ஒரு நாடாளுமன்றம், ஒருமொழி என்பதுதான் ஆர்எஸ்எஸ்-சின் கொள்கை. எனவே, ஆட்சி அதிகாரத்தை வைத்து ஒரேமதம், ஒரே கலாச்சாரம், ஒரே உணவு, ஒரே வரி என திணிக்கிறார்கள். மொழிவாரியான, இனம் சார்ந்த நியாயமான பெருமைக்கு வழிவகுக்கும் கீழடி அகழாய்வை அனுமதிக்க மறுக்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளில் மாட்டுக்கறி விவகாரத்தில் 23 இஸ்லாமியர்கள், 5 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு இஸ்லாமிய பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா பல இனங்கள், பன்மைத்துவம்வாய்ந்த நாகரீகம், வரலாற்றைக் கொண்டது. அதேநேரத்தில் இந்து வேறு, இந்துத்துவா வேறு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உண்மையில் இக்கூட்டத்தின் பன்மைத்துவ அழிப்பு வேலை என்பதே இந்துமதத்திற்கு விரோதமானதுதான். இந்து மதம் பன்மைத்துவம் கொண்டது. முருகனை ஷண்முகம், தமிழில் ஆறுமுகம் என்று அழைக்கின்றனர். இந்தப்பெயர் ஒரு குறையீடு. ஷண்முகம் என்பது=ஆறு மதங்களின் இணைப்பு. சைவம், வைணவம், சாத்தம், கவுமாறம், சவுரவம், காலபத்தியம் ஆகிய 6 மதங்களின் கூட்டமைப்புதான் இந்துமதம்.
அதுமட்டுமல்ல, குலதெய்வங்கள், சூத்திரர்களின் கிராம தெய்வங்களும் இணைந்ததுதான் இந்து மதம். பொங்கலும் புளியோதரையும் படைப்பதோடு, ஆடு வெட்டி, சாராயம் சுருட்டு வைத்து வணங்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறவர்கள், கள்ளழகர் (கள்ளர்களின் அழகர்) திருவிழாவிற்கும் போகின்றனர். இப்படி பன்மைத்துவம் கொண்ட இந்து மதத்தை ஒற்றைத் தன்மையாக மாற்றுவது ஏற்கத்தக்கதா?
திருப்பூர் நகரத்தில் பின்னலாடை களுக்கு கடுமையான ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டத்தை கண்டித்து மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இதைத் திசைதிருப்பும் வகையில், மாட்டுப்பொங்கல் நமது பண்பாடு, மாட்டை வெட்டுவது யார் பண்பாடு - விநாயகர் சதுர்த்திக்கு வாருங்கள் என்று இந்து அமைப்புகள் சுவர் விளம்பரம் செய்கின்றன.
மாட்டுப்பொங்கலுக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் என்ன சம்பந்தம்? இந்து முஸ்லீம் தமிழர் பண்பாடு, கலவரம் செய்வது யார் பண்பாடு என்று எதிர்வினையாற்ற வேண்டாமா?
இந்துத்துவா அமைப்புகள் என்றைக்காவது தீண்டாமையை எதிர்த்துப் போராடியது உண்டா? பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ரோமியோ எதிர்ப்பு படை என்று வைத்துள்ளனர். காதலுக்கான கடவுள் கிருஷ்ணன். சிவனையே காமமுறச்செய்தவன் மன்மதன். கிருஷ்ணனை கும்பிட்டுவிட்டு காதலர்களை தாக்குவது ஏன்? சாதிமறுப்பு காதல் திருமணங்கள் நடந்துவிடக்கூடாது என்பதால்தான். ஆர்எஸ்எஸ்-சின் இந்துத்துவா மநுவாதத்தை அடிப்படையாக கொண்டது.
எனவே, பன்மைத்துவத்தை மறுக்கும் வகையில் தமிழரின் பாரம்பரியம், நாகரீகத்திற்கு எதிராக கீழடி ஆய்வை சீர்குலைக்கிறார்கள். கீழடி அகழாய்வு முடியும் வரை அதன் பொறுப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமிக்க வேண்டும், தமிழரின் தனித்த நாகரீகம், வரலாற்றை மீட்டெடுக்க அகழாய்வு தொடர வேண்டும். ராமநாதபுரம், அழகன்குளத்திலும் அகழாய்வு நடைபெற்று வந்தது. போதிய பணம் ஒதுக்காததால் ஆய்வுபணி நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அகழாய்வையும் தொடர வேண்டும். இதற்காக தொழிற்சங்கத்தினரும் திரள வேண்டும்.
(சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளின் 29வது மாநில மாநாட்டில் “கீழடி நம்தாய்மடி” என்ற தலைப்பில் தமுஎகச கவுரவத் தலைவர் அருணன் நிகழ்த்திய உரையாற்றிலிருந்து)
படம்: கவாஸ்கர்
Theekkathir 20-08-2017,vannakkathir
வாசகர்கள் கருத்துக்கள்